சூறைக்காற்று மழையால் விமான சேவைகள் பாதிப்பு

74பார்த்தது
சென்னை புறநகரில் நேற்று இரவில் தொடங்கி, இன்று அதிகாலை வரை, தொடர்ந்து பெய்த மழை மற்றும் இடி, மின்னல், சூறைக்காற்றால், சென்னை விமான நிலையத்தில் 17 வருகை விமானங்கள், 18 புறப்பாடு விமானங்கள், மொத்தம் 35 விமான சேவைகள் தாமதமாகி, பயணிகள் கடும் அவதி.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை, விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தது. இடி மின்னல் சூறைக்காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா, ஹைதராபாத், கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 17 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலை வட்டமடித்து பறந்தன. அதன் பின்பு அவ்வப்போது இடி மின்னல் சூறைக்காற்று ஓயும் போது, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அபுதாபி, துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், டெல்லி, மும்பை, கொச்சி, கண்ணூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு, இந்தூர், உட்பட 18 விமானங்கள் சுமார் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி