திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால், 71; இவர் கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
மீண்டும் அதே ஆலையில் தினக்கூலி அடிப்படையில் கரும்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், கச்சிராயபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 10: 00 அளவில் வீட்டிற்குள் சென்ற ராஜகோபால் மாலை வரை வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இரவு 7: 00 மணிக்கு சென்று பார்த்தபோது ராஜகோபால் கட்டிலுக்கு கீழே பின் பக்க தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து கச்சிராயபாளயைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.