உளுந்தூர்பேட்டை அருகே பணத் தகராறில் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம், 46; இவர் பரிக்கல் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது ஓட்டலில் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் வேலை செய்து வருகிறார். தனுஷின் நண்பர்களான திருநாவலூர் புது காலனி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 24; ராஜ், 26; ஆகியோர் தனுஷிடம் கூகுள் பே மூலம் ரூ. 300 அனுப்புமாறு கூறியுள்ளனர்.
இதற்கு தனுஷ் பணம் கையிருப்பில் இல்லை எனக் கூறியுள்ளார். பின்னர் சில மணி நேரங்கள் கழித்து தனுஷ், ஓட்டல் உரிமையாளரான மாணிக்கத்தின் மனைவி பரிமளத்திடம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு பணம் தருவதாக கூறினார்.
அதன் பேரில் பணத்தை வாங்குவதற்காக விஜயகுமார், ராஜ் மற்றும் சிலரும் ஹோட்டலுக்கு வந்தனர். அங்கு வந்த விஜயகுமார் தரப்பினர் முதலில் கேட்டபோது பணம் இல்லை என்றும், பின்னர் பணம் இருப்பதாக எப்படி கூறலாம் என கேட்டு தனுஷிடமும், ஹோட்டல் உரிமையாளரான மாணிக்கத்திடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். தொடர்ந்து, விஜயகுமார், ராஜ் ஆகியோர் மாணிக்கத்தின் ஓட்டலை அடித்து உடைத்து பொருட்களை சேதப்படுத்தினர்.
இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து மாணிக்கம், அவரது மகன் மதன்ராஜ் 21, விஜயகுமார், ராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.