கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் குணமடைந்ததாக ஆட்சியர் தகவல்

78பார்த்தது
கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் குணமடைந்ததாக ஆட்சியர் தகவல்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 பேர் குணமாகியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆட்சியர் பிரசாந்த் சந்தித்து, அவர்களின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். பின், அவர் கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு தொடர்ந்து உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை (காலை 9: 30 மணி நிலவரப்படி) 193 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 53 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மீதமுள்ள 140 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களை 24 மணி நேரம் சுழற்சி அடிப்படையில் கண்காணிக்க, மற்ற மருத்துவமனையில் இருந்து 56 சிறப்பு மருத்துவர்கள், 10 தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேரின் உடல் நலம் தேறி வார்டுக்கு மாற்றப்பட்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 30 பேர் குணமாகியுள்ளதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி