சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி (70). கூலி தொழிலாளி.
இவர் நேற்று மாலையில் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் அவருடைய உறவினர்கள் சுப்பிரமணியை அடக்கம் செய்வதற்காக அதே பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் குழி தோண்ட ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அங்கு வந்து, இது எனக்கு சொந்தமான இடம். அதனால் இங்கு உடலை அடக்கம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் சுப்பிரமணியின் உறவினர்கள் இந்த பகுதியில் தான் நாங்களும், வாய்க்கால்புதூர் பகுதியில் வசிக்கும் சிலரும் ஆண்டாண்டு காலமாக இறந்தவர்களின் உடலை புதைத்து வருகிறோம். அதனால் இங்கு தான் சுப்பிரமணியின் உடலையும் அடக்கம் செய்வோம் என்றனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது இரு தரப்பினரிடமும் இன்ஸ்பெக்டர் சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குரிய இடத்தை உடனடியாக சர்வேயர் மூலம் அளவீடு செய்து இங்கு பட்டா நிலம் எது? சுடுகாட்டு நிலம் எது? என்பதை கண்டறிய உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதியளித்தார். இதனை இருதரப்பும் ஏற்று கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு மேல் சுப்பிரமணியின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.