ஈரோடு நாராயணவலசு, திருமால் நகரை சேர்ந்த அருக்காணி (80) வயதுடைய விதவை. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு பேரும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அருக்காணி மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் இரவில் வீட்டுக் கதவை மூடிவிட்டு அருக்காணி தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென அருக்காணி வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த பெண் ஒருவர் அருக்காணியை தாக்கி அவர் காதில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கத் தோடை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருக்காணி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தான் திருட்டுச் சம்பவம் நடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்டு அந்தப் பெண் இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வருகிறது.