ஈரோடு மாவட்டம் தாளவாடி விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியரிடம் வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப் பதாவது: -
தாளவாடி வட்டத்தில் உள்ள வனப்பகுதியின் எல்லை முழுவதும் போர்க்கால அடிப்படையில் பழைய ரயில்வே தண்டவாளத்தில் வேலி அமைக்கும் பணியை தொடங்கி விரைவாக நிறைவு செய்ய வேண்டும். தாளவாடி, ராமபுரம் பகுதியை ஒட்டிய கர்நாடக வனப்பகுதிக்கு ரயில்வே தண்டவாளத்தில் வேலி அமைக்கும் பணியை கர்நாடக வனத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நெய்த்தாளபுரத்தில் இருந்து தலைமலை வரை மற்றும் மாவள்ளத்திலிருந்து குழியாடா பகுதி வரை உடனடியாக கேபிள் மூலம் மின்சாரத்தை கடத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவள்ளம், தேவர்நத்தம், குழியாடா பகுதி மக்கள் 24 மணி நேரமும் குழியாடா திம்பம் மலை பாதையை பயன்படுத்த வனத்துறை இடையூறு செய்யக்கூடாது. வனப்பகுதியில் உள்ள அனைத்து பாரம்பரிய கோயில்களும் வளமையாக உள்ள கோயில் நடைமுறையை தொடர்ந்து பயன்படுத்த வனத்துறை இடையூறு செய்யக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.