ஆசனூர் அருகே
டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி தமிழகம் -கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலானதாகும். கடந்த சில நாட்களாகவே மலைப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில மைசூரில் இருந்து கோவை மாவட்டத்திலுள்ள ஒரு கல்குவாரிக்கு 20 ஆயிரம் லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கிளம்பி வந்து கொண்டிருந்தது. லாரியை கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கவுதம் (29) என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு உதவியாக கோவை நேரு நகரை சேர்ந்த சந்துரு (19) என்பவர் உடன் வந்து கொண்டிருந்தார்.
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே செம்மண் திட்டு என்ற பகுதியில் அந்த டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் லாரியின் குறுக்கே வந்து விட்டார். இதனால் விபத்தை தவிர்ப்பதற்காக லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டு உள்ளார். இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்ததால் 20 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டி வீணானது. நல வாய்ப்பாக தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை.