திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாத்தினிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் திருச்சியில் மார்க்கெட்டிங் வேலை செய்கிறார். இவரது மனைவி திவ்யா.
திவ்யா திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் திவ்யா கல்லூரிக்கு செல்வதற்காக பூத்தாம்பட்டி - தாடிக்கொம்பு பிரிவு பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திவ்யா கழுத்தில் தங்க செயின் இருப்பதை நோட்டமிட்டுள்ளனர்.
அதன் பின்னர் திவ்யா எதிர்பாக்காத போது அவர் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் செயினை அந்த மர்ம நபர்கள் பறித்து இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா கத்தி கூச்சலிட்டு உள்ளார். அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது தங்க செயினை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் திவ்யா தனது உறவினர்களுடன் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட வேடசந்தூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப் பகலில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.