அகரம் பேரூராட்சி உலகம்பட்டியைச் சேர்ந்தவர் அஜித் அமலா ஜீவன் (வயது 29) கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் ஒரு 15 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது. சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி இளைஞர் கடத்திச் சென்றார். சிறுமியின் தந்தை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சிறுமியை மீட்டு இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளியில் வந்த இளைஞர் மீண்டும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கடத்திச் சென்றார். சிறுமியின் தந்தை மீண்டும் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் முறையாக ஆஜராகாததால் இளைஞருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.
இன்ஸ்பெக்டர் வேலாயுதம் இளைஞரிடம் தீவிர விசாரணை நடத்தி அவரை அதே சிறுமியை இரண்டாவது முறை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று குடும்பம் நடத்தியதற்காக பரிந்துரை செய்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து இளைஞரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தார். சிறுமி பெற்றோருடன் செல்ல மறுத்ததால் திண்டுக்கல்லில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.