திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 319 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றையதினம் 39 பயனாளிகளுக்கு ரூ. 8. 32 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, உதவி ஆணையாளர் கலால் பால்பாண்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி முருகன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.