இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 7-ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செப்டம்பர் 13, 14ஆம் தேதியில் இரண்டு நாட்கள் ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விநாயகர் சிலைகளை இறுதி கட்டமாக வர்ணம் பூசும் மணிகள் நடைபெற்று வருகிறது. கண்ணைக் கவரும் விதமாக பல வண்ணங்களில் விநாயகர் பெருமான் புலி, சிங்கம், மயில், பசு மீது அமர்ந்திருப்பதை போலவும், சத்ரபதி சிவாஜி உருவத்தில் உள்ளிட்ட சிலைகள் 2 1/2 அடி முதல் 11 அடி அளவில் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதன் இறுதிக் கட்டமாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.