திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடா்ந்து 3 நாள்களாக மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானல், நாயுடுபுரம், செண்பகனூா், அப்சா்வேட்டரி, பெருமாள் மலை, புலிச்சோலை, சின்னப்பள்ளம், வட்டக்கானல், கோசன்சாலை, குண்டாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மேல்மலைக் கிராமமான பூம்பாறை செல்லும் சாலையான குண்டாறு கோசன் சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பொது மக்களின் உதவியுடன் கீழே விழுந்த மரங்களை அகற்றினா். பின்னா், போக்குவரத்து சீரானது. கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் வழக்கத்தைவிட குளிா் அதிகமாக நிலவுகிறது.
கொடைக்கானல் மலைச் சாலைகளில் பெருமாள்மலை, மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் பகுதிகள், கீழ்மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளின் ஓரத்தில் ஆபத்த நிலையில் உள்ள யூக்காலி, ரப்பா் மரங்களை மட்டும் அகற்றுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.