தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள சமுதாய அமைப்பாளர் காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமுதாய அமைப்பாளர் பணிக்கு திண்டுக்கல் மாநகராட்சியில் ஒரு பணியிடம், மாதச்சம்பளம் ரூ. 16, 000, கொடைக்கானல் நகராட்சியில் ஒரு பணியிடம் மாதச்சம்பளம் ரூ. 15, 000, பேரூராட்சிகள்(தாடிக்கொம்பு மற்றும் சின்னாளப்பட்டி) ஒரு பணியிடம் மாதச்சம்பளம் ரூ. 14, 000 என்ற வகையில் நிரப்பப்படவுள்ளது.
இந்தப் பணிக்கு கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகளை(MS Office) பெற்றிருக்க வேண்டும். வயது 01. 07. 2024-ஆம் தேதிப்படி 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் நேரடியாகவும், www. dindigul. nic. in என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் 09. 09. 2024- ஆம் தேதி மாலை 05. 45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி இன்று(செப்.3) தெரிவித்துள்ளார்.