திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, அய்யலூரில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறும். ஆடு, கோழி ஆகியவை விற்பனை களைகட்டும். திண்டுக்கல் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்க இந்த சந்தைக்கு வருவர். புரட்டாசி மாதம் பிறந்ததால் இன்று(செப்.19) சந்தையில் விவசாயிகளும், வியாபாரிகளும் குறைவாக வந்திருந்தனர்.
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் அசைவத்தை பொதுமக்கள் தவிர்த்து விரதம் இருப்பர். இறைச்சிக் கடைகளிலும் கூட்டம் குறைவாக இருக்கும். இன்று நடந்த அய்யலூர் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஆடு, கோழி ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் வரை மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடு வியாபாரம் பாதியாக குறைந்துள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 10 கிலோ செம்மறியாடு ரூ. 5500 லிருந்து ரூ. 6000க்கும், 10 கிலோ வெள்ளாடு ரூ. 6500லிருந்து ரூ. 7000க்கும் விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ. 300லிருந்து 350 ரூபாய் வரை விற்பனையானது. சண்டை சேவல்கள் தரத்திற்கு ஏற்ப ரூ. 3000லிருந்து 7000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.