நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி அருகே நாட்டார்பட்டியைச் சேர்ந்த பால்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் கூறியதாவது நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி அருகே நாட்டார்பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் ஊரில் ஏழைக்காத்த அம்மன், ஸ்ரீ வல்லடிகாரர் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் பூசாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 வருடத்திற்கு முன்பாக ராஜாமணி பூசாரி பொறுப்பில் இருந்து விலகி விட்டார். இதையடுத்து பால்சாமி பூசாரியாக ஊர் பொதுமக்களால் நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு சுமார் 20-க்கும் மேற்பட்ட சாமி கும்பிடும் திருவிழா நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே விலகிச் சென்ற ராஜாமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் எங்கள் குடும்பத்தினர் தான் பூசாரியாக இருந்து திருவிழா நடத்த வேண்டும். இல்லையென்றால் திருவிழா நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என பிரச்சனை செய்கின்றனர்.
ஆகவே ஊர் பொதுமக்கள் சார்பாக பிரச்சினை இல்லாமல் திருவிழா நடத்துவதற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.