திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அதிகளவில் மருத்துவ கழிவுகளும் குப்பைகளும் கொட்டப்பட்டு மினி குப்பை கிடங்காக மாறியுள்ளது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் நத்தம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. இந்நிலையில் புதன்கிழமை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இரவோடு இரவாக குப்பைகளை அகற்றுவதற்கு பதிலாக தேங்கியுள்ள குப்பைகளில் தீயை பற்ற வைத்தனர்.
தீ மள மளவென வென பற்றி எரிந்ததில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஏற்பட்ட புகை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் முழுவதும் பரவியது இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. தீ பற்றி எரிவது குறித்து நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.