திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சமுத்திராப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சம்பைபட்டியைச் சேர்ந்தவர் சவுந்திரன் மனைவி நாச்சம்மாள் (வயது 24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பைபட்டிக்கு விரைந்து வந்த 108 பணியாளர்கள் பிரசவ வலியால் இருந்த நாச்சம்மாளை நத்தம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரசவ மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஸ்டீபன் விரைவாக திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் அவசரகால பணியாளர் சேகர் நாச்சம்மாளுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவமானது. பின்னர் தாயையும் சேயையும் நலமுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
108 ஆம்புலன்ஸ்லேயே பிரசவம் பார்த்த பணியாளர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.