தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செப்டம்பர் 27 மாலை 3 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பர்-2024 திங்கள் வரையிலான காலத்திற்கு இயல்பான மழையளவு 942. 00 மி. மீ ஆகும். இந்த ஆண்டு தற்பொழுது வரை 441. 82 மி. மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2024-2025ஆம் ஆண்டிற்கு 1, 72, 280 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானியபயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்புசாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்பொழுது வரை 1, 07, 695 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.