தருமபுரி மாவட்டத்தில் உழவுத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகள் காய்கறிகளை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு காய்கறி வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் நுகர்வோர் இடத்தில் நேரடியாக அதிக வருவாயீட்டும் வகையில் தருமபுரி மாவட்ட வேளாண் துறை மூலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சி, பேரூராட்சிகளில் உழவர் சந்தை விற்பனை மையத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனைத்து உழவர் சந்தை களுக்கும் உழவர்களால் நேரடி விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வகை காய்கறிகளையும் நேரடியாக சென்று வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை முழுவதும் விசேஷமாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி தருமபுரி உழவர் சந்தையில் நேற்று இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். நேற்று உழவர் சந்தைக்கு 136 விவசாயிகள் கொண்டு வந்த 40 ஆயிரத்து 741 கிலோ காய்கறிகளும் 3100 கிலோ பழங்கள் என மொத்தம் 43, 841 கிலோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் ரூ. 17 லட்சத்து 93 ஆயிரத்து 578 ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை வாங்கி சென்றனர். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.