கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள ராயக்கோட்டை முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி ஆனந்தி இவர், அனுமந்தபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவில் பங்கேற்க உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து ஆனந்தி நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பேருந்து வந்தபோது, அதில் ஏற முயன்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். அப்போது பெண் ஒருவர், ஆனந்தியின் பேக்கில் இருந்த நகையை திருடினார். இதை கண்டு சுதாரித்து கொண்ட ஆனந்தி கூச்சலிட்டார். பின்னர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து, பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத் தார். விசாரணையில், அவர் கோவை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் மனைவி மேகலா என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.