தர்மபுரி சோகத்தூர் அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள பகுதிக்கு சென்ற பாஜகவினர் போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்ற வாசகங்களுடன் முதல்வரின் படம் உள்ள சுவரொட்டிகளை கடை முன்பு ஒட்டியுள்ளனர். இதேபோல் காரிமங்கலம், மாரண்டாள்ளி அருகே உள்ள அமானிமல்லாபுரம் பகுதிகளிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு பா.ஜனதாவினர் சுவரொட்டி ஒட்டினார்கள். உரிய அனுமதி இன்றி டாஸ்மாக் கடைகள் உள்ள பகுதியில் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக தர்மபுரி, காரிமங்கலம், மாரண்டாள்ளி உள்ளிட்ட காவல் நிலையங்களில் டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன் உள்பட 22 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.