கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாலம் இல்லாததால் வாய்க்காலில் கழுத்தளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை சுமந்து சென்ற போது திடீரென சடலமும் மூழ்கியது. வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த யாராவது ஒருவர் இறந்து விட்டால் உடலை அடக்கம் செய்ய வடக்குராஜன் வாய்க்காலை கடந்து மறுகரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் இறந்த நிலையில், வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்த சூழலில் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர். கழுத்தளவில் தண்ணீரில் உயிரைப் பணயம் வைத்து வாய்க்காலை கடந்தனர். அப்போது ஆழம் அதிகமாக இருந்ததால் சடலம் மூழ்கியது. பின்னர் அக்கரையில் இருந்தவர்கள் பதட்டத்தோடு தண்ணீரில் நீச்சல் அடித்து அவர்களுக்கு உதவினர். இனிவரும் காலங்களில் தண்ணீரில் இறங்கி சிரமப்படாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.