கோவை சௌரிப்பாளையத்தில் இயங்கி வரும் ரூபி ரியல் எஸ்டேட்ஸ் நிறுவனத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. நிறுவனத்தின் இயக்குநரான முருகன் மற்றும் வணிக மேலாளர் ஜோஷுவா ஆகிய இருவரை பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் நேற்று pகைது செய்துள்ளனர்.
நிறுவனத்தின் நிறுவனர் ராஜ் நடராஜன் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், பில்டிங் மெட்டீரியல் விநியோகம் செய்யும் நிறுவனங்களின் பெயரில் போலியான ரசீதுகள் தயாரித்து இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதுவரை 4 கோடிக்கு மேல் மோசடி கண்டறியப்பட்டுள்ள நிலையில், 1 கோடியே 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மோசடிக்கான ஆதாரங்கள் உறுதியாகியுள்ளன. நீண்ட காலமாக நிறுவனத்தில் பணியாற்றிய முருகன் மற்றும் ஜோஷுவா ஆகியோர் கூட்டாக மோசடி செய்து வந்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் ராஜ் நடராஜன் நிர்வாகப் பணிக்காக இவர்களை நியமித்த நிலையில், அவர்கள் அவரை ஏமாற்றியுள்ளனர்.
இத்தகைய மோசடிகள் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நம்பிக்கையை குலைத்து முதலீடுகளை நிறுத்த தூண்டும் என்று வேதனை தெரிவித்த ராஜ் நடராஜன், தமிழக அரசும் காவல்துறையினரும் விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.