வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானைகள் ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு தேயிலை தோட்டப்பகுதிகள் வழியாக இடம்பெயர்ந்து சென்று வருகிறது.
இவ்வாறு செல்லும் காட்டு யானைகள் சில சமயங்களில் ஓய்வெடுக்க ஆங்காங்கே தேயிலை தோட்டங்களில் படுத்தும் விடுகிறது. மேலும் காட்டு யானைகள் கூட்டம் தேயிலை தோட்ட பகுதியில் குட்டியுடன் முகாமிட்டு நீண்ட நேரம் நின்று விடுவதால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஆக.,29) அதிகாலை முதலே வால்பாறையில் இருந்து முடீஷ் செல்லும் வழியில் தாய்முடி எஸ்டேட்டில் தோட்ட பகுதியில் இரண்டு குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் கொண்ட கூட்டம் முகாம் இட்டு நின்றது. இதனால் மானம் பள்ளி வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளை யாரும் தொந்தரவு செய்யாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூட்டமாக நின்றிருந்த யானைகளை பார்த்து புகைப்படம் எடுத்து ரசித்துச் சென்றனர். பட்டப்பகலில் தேயிலை தோட்டத்திற்கு காட்டு யானைகள் முகாமிட்டதால் தேயிலை பறிக்கும் பணியும் பாதிக்கப்பட்டது.