கோவை: வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத் திணறி பக்தர் உயிரிழப்பு

58பார்த்தது
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (40) என்ற பக்தர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். பிப்ரவரி 1 முதல் மே மாதம் வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா, கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 24-ம் தேதி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார். ஏழு மலைகளையும் ஏறி தரிசனம் செய்துவிட்டு, இன்று அதிகாலை 3-வது மலையில் இறங்கி வரும்போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சிவாவுக்கு நித்யா என்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆலாந்துறை போலீசார், சிவாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதயப் பிரச்சினை மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மலை ஏற வேண்டாம் என்று வனத்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி