சூலூரை அடுத்த செஞ்சேரி மலை பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டுனராக இருக்கிறார். கடந்த ஒரு வாரமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தாஸ் என்ற மருந்தகத்தின் அருகே இருக்கும் கிளினிக்கில் ஊசி போட்டு இருக்கிறார். வீடு திரும்பியவருக்கு வயிற்று வலி அதிகமாக இருந்து மயக்கம் போட்டு கிடந்தவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தாஸ் மெடிக்கல்ஸ்க்கு சொந்தமான மருந்தகத்தின் அருகில் உள்ள கிளினிக்கில் ஊசி போட்டதால் தான் மகன் இறந்ததாக கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்ட நிலையில், சுல்தான்பேட்டை காவல் துறையினர் தாஸ் மருந்தகம் கிளினிக் குறித்து விசாரணை செய்யும் போது அது பால் ஜெயசீலன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. மருந்தகத்தின் அருகிலேயே பால் ஜெயசீலன் சிறியதாக கிளினிக் தொடங்கி மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார். இவருடைய கிளினிக்கை வெளிநாட்டில் மருத்துவம் படித்த இவருடைய மகன்களான ஜீவன் ராஜ் மற்றும் ஜான் குணசீலன் ஆகியோர் கவனித்து வந்துள்ளனர். இந்திய மருத்துவ கவுன்சிலால் நடத்தப்படும் தேர்வினை எழுதாமலேயே முறைகேடாக மருத்துவம் பார்த்து வந்ததாக இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.