கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள பிரபலமான குமரன் தங்க மாளிகை நகைக்கடையில், நேற்று முன்தினம் தொழிலதிபர்கள் போல் நடித்து வந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸை போலி காசோலை கொடுத்து மோசடி செய்துவிட்டு தப்பிச் சென்றனர். நகைக்கடை ஊழியர்கள் அவர்கள் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அது போலியானது என்று தெரியவந்தது. உடனடியாக நகைக்கடை மேலாளர் மனோஜ் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலி காசோலை வழங்கிய பிரதீபா ராணி நாயுடு மற்றும் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கு முடக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.