கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் பண்ணாரி அம்மன் குரூப் நிறுவனங்களுக்குச் சொந்தமான சிவாஸ் மதுபான ஆலையில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பண்ணாரி சர்க்கரை ஆலை, நிதி நிறுவனம், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் பாலசுப்பிரமணியம் சரவணன் தான் சிவாஸ் மதுபான ஆலையின் இயக்குநராக உள்ளார். 1983 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த மதுபான ஆலையில் சிவாஸ் ஃபைன் பிராந்தி, மானிட்டர் டீலக்ஸ் பிராந்தி, கிளாசிக் கிராண்டி ரம் போன்ற மதுபான வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலேயே மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மாறாக, பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் மதுபானங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் 5 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சிவாஸ் மதுபான ஆலை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஆலை வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அலுவலகத்தில் மட்டும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் நோக்கம் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த முழுமையான விவரங்கள் சோதனை முடிந்த பின்னரே தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திடீர் சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.