பொள்ளாச்சி நகராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்தால் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடைக்காரர்களுக்கு கூட்டம் நடத்தி பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில்கோட்டூர் ரோட்டில் பொள்ளாச்சி நகராட்சி சுகாதார அலுவலர் சுந்தர்ராஜ், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வரும் சரக்கு ஆட்டோவை நிறுத்தி நேற்று சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். நகராட்சி கமிஷனர் கணேசன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.