கோவை: கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா!

68பார்த்தது
கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவிலின் தேர்த்திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. மாசி மாதம் நடைபெறும் இந்த திருவிழா கடந்த மாதம் 10 ஆம் தேதி முகூர்த்த கால் நடுதலுடன் தொடங்கியது.
கடந்த 18-ம் தேதி பூச்சாட்டு, 25-ம் தேதி கொடியேற்றம், அக்னி சாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் உற்சவர் பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டு செல்லப்பட்டார். வேதமந்திரம் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் கோனியம்மன் எழுந்தருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரில் எழுந்தருளிய கோனியம்மனை தரிசனம் செய்தனர். உப்பு, மிளகு ஆகியவற்றை திருத்தேர் மீது வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மதியம் 2. 05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக தேர் சென்றது. பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி தேரை இழுத்தனர். மாலையில் தேர் நிலைத்திடலை வந்தடைந்தது.
இந்த தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோனியம்மனின் அருளைப் பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி