கோவை ஈஷா யோகா மையத்தில் 31 வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி இன்று காலை ஆறு மணி வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நவராத்திரி விழாவையொட்டி நள்ளிரவு தியானத்தில் உச்சரிக்கப்படும் திருவைந்தெழுத்து மகா மந்திரத்தை பக்தர்களுக்கு தீட்சையாக வழங்கிய சத்குரு, மிராக்கிள் ஆஃப் தி மைண்ட் என்ற இசை செயலியையும் அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில், திரையுலக பிரபலங்களான நடிகர்கள் சந்தானம், தமன்னா, விஜய் வர்மா, திரைப்பட இயக்குனர் ஓம் பிரகாஷ் மெஹ்ரா மற்றும் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், பொதுமக்கள் இரவு முழுவதும் விழித்திருக்கும் வகையில், பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவைச் சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, பாரடாக்ஸ் என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மீகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பிரபலமான ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் பங்கேற்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.