கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காததோடு, பிஎஃப், இஎஸ்ஐ போன்ற சலுகைகளுக்கான பிடித்தங்களை முறையாக செலுத்தாமல் ஒப்பந்ததாரர் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துப்புரவு பணிகளை புறக்கணித்து, தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.