கோவை உக்கடம் மீன்மார்கெட்டிற்கு ராமேஸ்வரம், நாகப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து மீன் வரத்து இருக்கும். ஒவ்வொரு ஞாயிறுக்கிழமைகளில், 10 முதல் 15 டன் வரை மீன்கள் வரத்து இருக்கும். குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பரவலாக பெய்த காரணத்தால், வரத்து கணிசமாக குறைந்து காணப்பட்டது. பொதுவாக வரத்து குறைந்தால், மீன்களின் விலை அதிகரிக்கும். ஆனால், கார்த்திகை மாதம் துவக்கம் என்பதால், மீன் வாங்குவோரின் எண்ணிக்கையும் சற்று குறைந்ததால் விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. இதுகுறித்து, கோவை மீன் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்பாஸ் கூறுகையில், வழக்கமாக, 10 முதல் 20 டன் மீன்கள் வரத்து இருக்கும். நேற்று, 6-7 டன் மீன்கள் மட்டுமே வரத்து இருந்தது. இருந்தும் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. வஞ்சிரம் மீன் கிலோ 800 ரூபாய்க்கும், மத்தி 100 ரூபாய், அயிலை கிலோ 250 ரூபாய், இறால் 450 ரூபாய், சங்கரா 300 ரூபாய், நெத்திலி 300 ரூபாய், ஊளி 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.