கோவை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 2000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க பல காவலர்கள் மற்றும் வார்டன்கள் பணியில் உள்ளனர். கைதிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்போது அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இந்த ஆம்புலன்ஸை இயக்கும் காவலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி ஒரு கைதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிரசாத் என்ற காவலர், மீண்டும் சிறைக்கு திரும்பும்போது, தனது சக காவலர் ரியாஸ்கானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ரியாஸ்கான், பிரசாத்தை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரை கடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய போலீசார் ரியாஸ்கான் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று தகராறில் ஈடுபட்ட இரண்டு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.