கோவை: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்த மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வாழை விவசாயிகள், தற்போது ஜயப்பன் கோவில் சீசனில் நேந்திரன் வாழைக்கு கிடைத்துள்ள அதிக விலைக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழை விவசாயம் பெரும் தொழிலாக உள்ளது. கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேந்திரன், கதளி, பூவன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவு காரணமாக ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், நேந்திரன் வாழைக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
இந்நிலையில், தற்போது ஜயப்பன் கோவில் சீசனில் நேந்திரன் வாழைக்கு கிலோ 50 முதல் 55 ரூபாய் வரை விலை கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் உள்ள வாழைக்காய் ஏல மையத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் கேரள வியாபாரிகள் நேந்திரன் வாழையை அதிக விலைக்கு வாங்கியுள்ளனர். வரத்து குறைவாக இருப்பதால் விலை தொடர்ந்து உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.