கோவை போத்தனூர் ரயில் நகரை சேர்ந்தவர் ஜெயம்மாள்(48). இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என தெவிக்கப்பட்டிருந்தது. அதில், உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து விவரங்களை தேடினார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நீங்கள் டெலிகிராம் குழுவில் இணைந்து நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள புதிய திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என தெரிவித்தார்.
இதனை நம்பிய ஜெயம்மாள் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு கட்டங்களாக ரூ. 7, 90, 500 செலுத்தினார். ஆனால் அவருக்கு எந்த விதமான லாப தொகையும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயம்மாள் அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மொத்தமாக ரூ. 10 லட்சம் செலுத்தினால் மட்டுமே லாபம் மற்றும் அசல் தொகையை திரும்ப பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
மொத்தமாக அந்த மர்ம நபர் ரூ. 7, 90, 500ஐ சுருட்டி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயம்மாள் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.