சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி, எல்என்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுக்கள் மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, மாற்று எரிபொருள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் சேமிக்கப்பட்ட தொகை குறித்த தகவலை போக்குவரத்துத் துறை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், மாநகர பேருந்துகளை ஒரு லிட்டர் டீசல் மூலம் 4. 76 கிமீ தூரம் இயக்க முடியும். அதன்படி ஒரு கி. மீ-க்கு ரூ. 19. 03 செலவாகும். இதுவே சிஎன்ஜி மூலம் 4. 78 கிமீ-க்கு இயக்க முடிகிறது. இதற்கு ரூ. 18. 47 (ஒரு கி. மீ) செலவாகிறது.
இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் ரூ. 2, 319 சேமிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் மற்றும் புறநகருக்குள்ளாக மட்டுமே மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதால் சேமிப்பு தொகை வெகு குறைவாக உள்ளது. அதேசமயம், பிற போக்குவரத்துக் கழக பேருந்துகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் இயங்குவதால் மைலேஜ் அதிகமாக கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சேலம் கோட்டத்தில் டீசல் மூலம் ஒரு கி. மீ இயக்குவதற்கு ரூ. 15. 80 செலவாகும் நிலையில், சிஎன்ஜி மூலம் இயக்கினால் ரூ. 11. 24 மட்டுமே செலவாகும். இதனால் கடந்த மாதம் மட்டும் சேலம் கோட்டத்தில் ரூ. 2. 08 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.