எண்ணூர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

84பார்த்தது
எண்ணூர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
எண்ணூர் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு, தாம்பரம், உயர் நீதிமன்றம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை ஏற்ப இங்கு பேருந்து வசதி இல்லை. இதனால் சென்னைக்கு செல்ல வேண்டிய மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், அலுவலர்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி நேற்று முன்தினம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், கே. பி. சங்கர் எம்எல்ஏ ஆகியோர் எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பேருந்து நிலையங்களை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பேருந்துகள் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் குறித்து அங்கு இருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர், அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: எண்ணூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எம்எல்ஏ நிதியிலிருந்து ₹1. 5 கோடி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹1. 29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 மாத காலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அதிகாலை நேரத்தில் சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணூரில் இருந்து டோல்கேட் வரை பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி