மதுரவாயல், அண்ணாநகர் பாடிக்குப்பம் சாலையைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 54; அரிசி மண்டி வைத்துள்ளார். வியாபாரத்தில் ஏற்பட்ட கடன் காரணமாக, தனக்குச் சொந்தமான 'பொலிரோ பிக் ஆப்' வாகனத்தை விற்க முடிவு செய்தார்.
தன் நண்பர் வினோத்குமார் என்பவர் வாயிலாக, மதுரவாயலைச் சேர்ந்த அன்பழகன் என்ற புரோக்கரிடம், வாகனத்தின் ஆர். சி. , ஆவணத்தை, மூன்று மாதங்களுக்கு முன் கொடுத்துள்ளார். ஆனால், வாகனத்தை விற்பனை செய்து கொடுக்காமலும், ஆவணத்தை திருப்பித் தராமலும் அன்பழகன் ஏமாற்றி வந்துள்ளார்.
கடந்த ஜூன் 18ம் தேதி, ஜெயபிரகாஷின் வாகனத்தை போக்குவரத்து போலீசார் மடக்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாகனம், நாகப்பன் என்பவரது பெயரில் இருப்பது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த ஜெயபிரகாஷ், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அன்பழகனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் அன்பழகன், தான் வைத்திருந்த ஆவணம் இல்லாத வாகனத்துடன், ஜெயபிரகாஷ் வாகனத்தின் ஆவணங்களை இணைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, தொடர்புள்ள மதுரவாயல் கார்த்திகேயன் நகரை சேர்ந்த அன்பழகன், 53, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன், 42, திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா, 55, மற்றும் வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசலபதி, 54, ஆகிய நால்வரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.