திமுக தொண்டர்களின் குரலில் உள்ள நியாய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தலைமை தவறாது என்று கட்சியின் தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு. க. ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்து புறப்படும் முன், திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய பவள விழா அழைப்பு மடலில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாவட்டங்களில் பவளவிழாவுக்கான சுவர் விளம்பரங்கள் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்துகொண்டேன். கூட்டங்களில் தொண்டர்களின் ஆழ்மனக்கருத்துகள் குரலாக வெளிப்பட்டன. அவர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்க தலைமை தவறுவதில்லை என உறுதியளிக்கிறேன்.
75 ஆண்டுகள் கழித்து, தென்சென்னையில் நந்தனம் ஒய். எம். சி. ஏ. திடலில் திமுகவின் பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழகம், அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் என உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக, நண்பனாக திகழும் இயக்கம்தான் திமுக. இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை. இந்த வெற்றிப் பயணம் தொடர, செப். 17-ம் தேதி திமுகவின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம் என தெரிவித்துள்ளார்.