
சென்னை: மின்சாரத்தை ரூ. 20க்கு வாங்குவதை ஏற்க முடியாது - அன்புமணி
நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 4,697 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மின்பற்றாக்குறையை சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ. 20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ. 20க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. இதே நிலை நீடித்தால் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது. எனவே நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.