பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்க முடியாது என்று கூறுவதற்கு மாநில அரசுக்கு இருக்கிற உரிமையை மறுக்கிற வகையில் பழிவாங்கும் போக்கோடு கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுப்பது கூட்டாட்சியை குழிதோண்டி புதைக்கிற செயலாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிற மோடி ஆட்சியில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை வஞ்சிக்கிற போக்கு தொடர்வதையே இவரது பேச்சு உறுதிப்படுத்துகிறது. அரசியலமைப்பு சட்டப்படி பல மாநிலங்களின் ஒன்றியத்தை தான் பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் விரோதமாக செயல்படுகிற ஒன்றிய பாஜக அரசின் வேஷத்தை கண்டு தமிழக மக்கள் என்றைக்கும் ஏமாற மாட்டார்கள். அனைத்து மாநிலங்களையும் சமமாக கருத வேண்டிய ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது மிகப்பெரிய அநீதியாகும். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். இதை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.