கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். சென்னையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர், இதுவரை 90 சதவீதத்துக்கும் அதாவது 450-க்கும் அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை 10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படாத நிலையில், 90% க்கும் அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூறுவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இதுவரை அதிகபட்சமாக 50 வாக்குறுதிகள், அதாவது 10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.