காங்கிரஸ் வந்தால் தான் காமராஜர் ஆட்சி என்று இல்லை, நல்லாட்சி எங்கெல்லாம் நடக்கிறதோ அதுவும் காமராஜர் ஆட்சிதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தென் சென்னை மத்திய மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி , கே. வி. தங்கபாலு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஆரூண் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது; ஒவ்வொருவருக்கும் ஒரு மாடல் ஆட்சி இருக்கும். திமுகவிற்கு திராவிட மாடல் ஆட்சி போல காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர் ஆட்சி.
காங்கிரஸ் வந்தால் தான் காமராஜர் ஆட்சி என்று இல்லை, நல்லாட்சி எங்கெல்லாம் நடக்கிறதோ அதுவும் காமராஜர் ஆட்சிதான். அவர் (மாணிக்கம் தாகூர்) புரிதல் இல்லாமல் பேசுகிறார் என தெரிவித்தார்.