போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த பெண் கைது

81பார்த்தது
போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த பெண் கைது
வங்கதேசத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த இளம்பெண்ணை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது மத்திய பிரதேசம், போபால் முகவரியுடன் ஜல்குரி வில்லாகி என்ற பெயருடன் 25 வயது இளம்பெண் ஒருவர் வங்கதேசத்திற்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பி வந்தார். அந்த பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவருடைய பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது, அது போலியானது என தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவருடைய உண்மையான பெயர் ஷார்மின் அக்தர் (25), வங்க தேசத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. மேலும் இவர், மேற்குவங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்று, சில ஏஜென்டுகளுக்கு பணம் கொடுத்து போலியான இந்திய ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து போலி இந்திய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார். அதன் மூலம் வங்கதேசத்திற்கு சென்ற ஷார்மின் அக்தர், மீண்டும் அதே போலி பாஸ்போர்ட்டில் டாக்காவில் இருந்து சென்னை வந்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி