சென்னை மாநகராட்சி சார்பில் வட சென்னையில் நடைபெறும் பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேரில் ஆய்வு செய்தார்.
எழும்பூரில் காந்தி இர்வின் பாலம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை இணையுமிடத்தில் ரயில்வே பாதையின் அருகில் ரூ. 5.20 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அணுகு கால்வாய் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர், பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, திரு. வி. க. நகர் மண்டலம், 77-வது வார்டு, டெமல்லஸ் சாலையில் ரூ. 17.57 கோடியில் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு மழைநீர் வெளியேற்ற அமைக்கப்பட்டு வரும் நீரேற்று அறை மற்றும் இதர கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டார். முனுசாமி கால்வாயிலிருந்து நீரேற்று நிலையம் மூலமாக பக்கிங்ஹாம் கால்வாயில் நீர் வெளியேற்றும் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார்.
வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையின்மேல் ரூ. 226 கோடியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணியை பார்வையிட்டு, மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்கவும், ரயில் பாதைகளின் குறுக்கே அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கவும் அறிவுறுத்தினார்.