சென்னை: புறநகர் ரயில்சேவை ரத்து.. அதிகளவில் பேருந்துகள் இயக்கம்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ள காரணத்தால், அவ்வழியாக இயக்கப்படும் சுமார் 28 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதனால், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் பகுதியின் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதியில் நவம்பர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால், பிற்பகல் 1. 20 (ரயில்வே நேரம்: 13. 20) மணி முதல் பிற்பகல் 4. 20 (ரயில்வே நேரம்: 16. 20) மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.