சென்னை, திருச்சி, காஞ்சிபுரத்தில் மறு கட்டுமான திட்டத்தின் கீழ், இந்தாண்டு ரூ. 1, 147 கோடியில் 6, 746 குடியிருப்புகள் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் என்று அமைச்சர் தா. மோ. அன்பரசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தா. மோ. அன்பரசன், 813 குடியிருப்புதாரர்களுக்கு ரூ. 2. 48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், கடந்த 2015-ம்ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், கூவம் நதிக்கரைகளில் இருந்த பல்லவன் நகர், எஸ். எம். நகர், கக்கன் நகர் போன்ற பகுதிகளில் குடியிருந்த குடும்பங்களுக்கு பெரும்பாக்கம் திட்டப் பகுதிக்கு மறுகுடியமர்வு செய்ய தற்காலிகமாக குடியிருப்பு ஆணை வழங்கப்பட்டது.
இவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, முதல் கட்டமாக 440 குடும்பங்களுக்கு நிரந்தர ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்துக்கு ரூ. 35 ஆயிரம் வீதம் மறுகுடியமர்வு நிவாரணத் தொகையாக ரூ. 1 கோடியே 54 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.