விதை நெல், உரம், பயிர்க்கடனை அளிக்க நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்

62பார்த்தது
விதை நெல், உரம், பயிர்க்கடனை அளிக்க நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீர் மேலாண்மையைக் கடைபிடிக்கவும், சம்பா சாகுபடி செய்வதற்குரிய இடுபொருட்களை வழங்கவும் திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாலும், இந்தத் தருணத்தில் நீர் மேலாண்மையைக் கடைபிடிப்பதும், விவசாயிகளுக்கு தேவையானவற்றை உடனடியாக வழங்குவதும் மிகவும் அவசியம்.

பெரும்பாலான டெல்டா விவசாயிகள் காவேரி நீரை மட்டுமே நம்பியுள்ள நிலையில், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததன் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட இயலவில்லை.

மேலும், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்களை முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கவும், பயிர்க்கடனை உடனடியாக அளிக்கவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, காவேரி டெல்டா பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நீரினை அளிக்கும் வகையில் நீர் மேலாண்மையை திறம்படக் கடைபிடிக்கவும், விவசாயிகளுக்கு உரிய இடுபொருட்களை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி